இப்படி நீட்டாக பெயர் சூட்டியதற்கு பதில் ‘அவரும் அவளும்’ என்று ஷார்ட்டாகவே தலைப்பிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால், இயக்குனர் கெளதம் மேனனின் தலைப்புரிமையில் தலையிடும் உரிமை நமக்கில்லை.
காதல் திருமணம் செய்துகொண்ட தனது அம்மாவிடம் 30 வருடங்களாக பேசாத தாத்தா எம்.எஸ் பாஸ்கரை ஊரடங்கு சூழலில் பார்க்கச் செல்லும் பேத்தி ரித்து வர்மாவுக்கும் தாத்தா எம்.எஸ் பாஸ்கருக்குமான பாசக்குவியல்தான் ’அவரும் நானும் / அவளும் நானும்’.
வாட்ஸ்-அப்புக்கு வைஃபை தேவைப்படுமில்ல? என்று கேட்பது, பழத்தை கட் செய்து பேத்திக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு கொண்டுபோய் கொடுப்பது என்று டெக்னாலஜி தாத்தாவாக கெத்து காட்டுகிறார் எம்.எஸ் பாஸ்கர். தன் அறையிலேயேதான் தங்கிக்கொள்வேண்டும் என்றிருந்த பேத்தி ரித்து வர்மா, தானாகவே மனமிறங்கி வந்து தாத்தாவுடன் பேசுவது, சமைப்பது என நேரத்தைச் செலவிடுவது செம்ம சுவாரஸ்யம். இருவருமே எதார்த்தமான நடிப்பால் நெஞ்சம் நெகிழவைக்கிறார்கள்.
ஆனால், ’30 வருடங்களாக அம்மா மீதான கோபத்திற்கு காரணம் உங்களுக்குப் பிடிக்காதவரை கல்யாணம் பண்ணினதாலா? எங்கப்பா உங்களோட லேப் அசிஸ்டெண்டா இருந்ததா? இல்ல… வேற சாதியா?’ என்று கேட்கும் பேத்தியிடம் ‘நான், சைண்டிஸ்ட்ம்மா. எனக்கு, சாதி, மதம், மொழி, இனம் இதெல்லாம் என்னன்னு தெரியாது’ என்கிறவர் தனது மகளின் சங்கீதக் குரலைக் கேட்கவிடமால் செய்ததுதான் என்று கூறும் காரணத்தை ஏற்க மறுக்கிறது மனம். அதனாலேயே, படம் முடியும்போது எவ்வித ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மகளைக் குறித்து உருகி அழும் காட்சிகளில் இதயத்தில் ‘எட்டு தோட்டாக்கள்’-ஐ பாய்ச்சிவிடுகிறார் எம்.எஸ் பாஸ்கர்.
அப்துல் கலாமே தமிழில் நன்றாக பேசுவார். ஆனால், அவரிடம், விஞ்ஞானியாக இருந்ததாக கூறும் பாஸ்கரை அடிக்கடி ஆங்கிலத்தில் பேசவைத்து இங்கிலீஷ் பாஸ்கராகிவிட்டார் கெளதம் மேனன். அதுவும், நாசா ரேஞ்சுக்கு விஞ்ஞானப்பூர்வமாக பேசும் எம்.எஸ் பாஸ்கரை தனது மகள் ஃப்ளாஷ்பேக்கை பேசுவதில் மட்டும் நாரதகானா சபாவில் கொண்டுபோய் அமரவைத்துவிடுகிறார் கெளதம் மேனன். நம்மையும்தான். வழக்கம்போல, கண்ணால் பார்க்காமலேயே காதால் கேட்டு கதையை புரிந்துகொள்ள வைக்கும் யுக்தியை இப்படத்திலும் கையாண்டுள்ளார் ‘கதைச்சொல்லி’ மேனன்.
“ஒரு பொண்ணுன்னு இருந்தா அவ கல்யாணமாகி புகுந்தவீட்டுக்கு போயித்தான் ஆகணும்ங்கிறது எனக்கு தெரியும். ஆனா, அவளோட குரலை நான் ஏம்மா இழக்கணும்? இந்த உலகம் ஏன் இழக்கணும்? குயிலோட குரலுக்கு பூட்டு போடலாமா?” என்று கேட்கும் எம்.எஸ் பாஸ்கர் தனது இதயத்திற்கு போட்ட பூட்டை திறந்திருந்தால் ’கண்ணா தூது போடா எந்தையிடம்’ என்று குயிலின் குரலை எப்போதேக் கேட்டிருக்கலாமே!?
- வினி சர்பனா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 Comments